வர்மம் என்றால் என்ன?
வர்மம் என்ற சொல்லை மர்மம் என்ற சொல்லின் திரிபாகக் கொள்ளலாம். அதாவது உடலில் மர்மமாக, மறைமுகமாக காணப்படும் புதிரான இடங்கள். சூட்சும பகுதிகள் / SECRET PLACES என்று அர்த்தம். மர்மமானது காலம், அடக்கம், சூட்சம், வன்மம், ஏமம் போன்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் உடம்பானது நரம்பு, எலும்பு, சதை இவற்றால் இணைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில இடங்கள் மர்ம பகுதிகளாகும். அந்த இடங்களில் அடியோ, உதையோ, தட்டோ, குத்தோ, தாக்கோ, இடியோ ஒருவருக்கு அறிந்தோ, அறியாமலோ ஏற்படும் போது உடலில் பாதிப்பு உண்டாகிறது. அதுவே மர்ம / வர்ம பாதிப்பு!
வர்மத்தின் பல்வேறு கோணங்களில் நாம் அதனை சரியாக புரிந்து கொண்டோம் என்றால்..! எப்படி? எந்த எந்த சூழ்நிலையில் வர்மம் சிறப்பாக உடலின் நண்பனாக வேலை செய்யும் எங்கு துணை மருத்துவமாக வேலை செய்யும் என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
வர்ம மருத்துவத்தில் வரம்புகள்
கலைகளில் குற்றம் காண்பது இயலாத காரியம்! சிலரின் தவறான புரிதல்கள் காரணமாகவே அரை, குறை, அவசரகதியில் பயன்படுத்தல் இதனால் கலை அதன் உண்மைத் தன்மையை இழக்கிறது. அது மர்ம கலை எனப்படும் வர்மத்திற்கும் பொருந்தும்.
வர்ம மருத்துவத்தில் சில வரம்புகள் உள்ளது.
- சில நோய்களுக்கு நன்கு உதவும்
- சில நோய்களுக்கு துணையாக உதவும்
- சில நோய்களுக்கு உள் மருந்து / உணவு உதவியுடன் உதவும்
மனித உடல் மற்றும் வர்மம்
மனிதனின் உடலை மூன்றாக வர்மம் பிரிக்கிறது, இதில் பல விதமான ஆற்றல்கள் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதுவே சுவாசக் காற்று இந்த ஆற்றல்களுக்குள் ஏதேனும் குளறுபடி, அல்லது போதுமான ஆற்றல் இல்லை என்றாலும், ஆற்றல் நின்று விட்டாலும் அங்கே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன.
- பருஉடல்
- காரண உடல்
- நுண்ணுடல்
பருஉடல்
பருஉடல் என்பது உடலில் சூரிய மண்டலத்தைக் குறிக்கும். சூரிய மண்டலம் தொண்டையிலிருந்து தொப்புள் வரை உள்ள இடம். இதில் இதயம் உள்ளது. 72,000 நாடிகளாக பிரிந்து நமது உடலுக்குள் செல்கிறது.
காரண உடல்
இது மூளை மற்றும் நரம்புகளைக் கொண்டது. இதில் 72,000 நரம்புகள் மூளையிலிருந்து செல்கிறது. பருஉடலுக்கு ரத்தமும், காரண உடலுக்கு உணர்வுகளும் காரணமாக அமையும்.
நுண்ணுடல்
இது மூலாதாரம் என்னும் குண்டலினி சக்தியில் உள்ளது.
வர்ம மருத்துவத்தில் நோய்கள் பிரிவு
வர்ம மருத்துவம் நோயினை இரண்டாக பிரித்துக் கொள்ளும்:
- காயத்தினால் வந்ததா?
- காயம் இல்லாமல் வந்ததா?
காயத்தினால் வந்த நோய் மறுபடி இரண்டாக பிரிக்கப்படும்: வர்ம புள்ளிகள் பாதிக்கப்பட்டு வருதல், எளிய சிராய்ப்பு, வீக்கம் என்று பிரியும்.
வர்ம மருத்துவத்தின் சிறப்பு
எலும்புகளில், நரம்புகளில் வலி ஏற்படும் காயங்கள் மற்றும் நோய்களை சரி செய்ய வர்ம மருத்துவம் தான் சரியானது. இந்தியாவிலேயே வர்ம மருத்துவம் தான் இவற்றுக்கு சிறந்தது எனலாம். காயங்கள் மற்றும் காய சிகிச்சைகளைப் பற்றி வர்ம மருத்துவம் நிறைய பேசுகிறது.
நிறைய இடங்களில் நாம் வர்ம புள்ளிகளை வைத்து குணப்படுத்தினாலும் உள் மருந்துகள் / உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. அப்போது தான் முழுமையான தீர்வு நிரந்தரமாக கிடைக்கும்.
நவீன வாழ்வியல் முறையில் இயற்கையாக கிடைக்கும் சத்துள்ள உணவுகளை தவிர்த்து, டேஸ்ட் போன்ற செயற்கை உணவுகளை நமக்குத் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் தற்போது பலர் இயற்கை மற்றும் பாரம்பரிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேடி உண்ண தொடங்கியுள்ளார்கள். இது உடல் நலனுக்கான அக்கறையை காட்டுகிறது.
வர்ம புள்ளிகள் மற்றும் அடங்கல் புள்ளிகள்
வர்ம புள்ளிகள், அடங்கல் புள்ளிகள் என்றால் என்ன?
நமக்கு ஏதேனும் அடிபட்டு விட்டால் மூச்சுக் காற்று நமது உடலில் ஒரே இடத்தில் தங்கிவிடும். இது அடங்கல் புள்ளியாகும். இதில் மருத்துவம் மூலமாக காற்றைக் கலைத்து மீண்டும் அதன் ஓட்டத்தை தூண்டுவது வர்மமாகும்.
108 வர்ம புள்ளிகள் நம் உடலில் மிக முக்கியமானது. இந்த புள்ளிகளில் ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது நோயை விளைவிக்கும். இதனை சரி செய்யவே வைத்தியம் தேவைப்படுகிறது.
வர்ம புள்ளிகள் என்பது நோய்கள் வருவதற்கும், நோய்களிலிருந்து காக்கவும், நிவாரணப்படுத்தவும், வலிகளில் இருந்து காத்துக் கொள்ளவும் மற்றும் பல நோய்களிலிருந்து காக்கும் உடலின் நண்பனாக செயல்படுகிறது.
பரு உடல் மற்றும் நாடி
பரு உடல் ஏதேனும் நோயிற்கு ஆளாகும்போது இதில் உள்ள சூட்சும சரீரம் பாதிக்கப்படுகிறது. நாடி என்பது பருஉடல் நிலையையும் சூட்சும சரீரத்தின் நிலையையும் அறிய பயன்படுகிறது.
நம் உடலில் 12 நாடிகள் உள்ளது. இது வாசி எனப்படும். 108 வர்ம புள்ளிகளும் 255 வர்ம பாதைகளும் உள்ளது. உடலின் ஆறு ஆதார சக்கரங்களுடன் தொடர்புடையது.
பரு உடல் நோய்களை சரி செய்ய பயன்படுகிறது. வாத, பித்த, கபம் ஆகியவற்றையும் சரி செய்ய பயன்படுகிறது.
மண், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் வர்மப் புள்ளிகள் உள்ளது. இதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் அதனையும் சரி செய்ய நாடி பயன்படுகிறது.
வர்மம் எத்தனை வகைப்படும்?
- தொடு வர்மம் - 96 - Varmam Due to Touch
- தட்டு வர்மம் - 8 - Varmam Due to Blow
- தடவு வர்மம் - 4 - Varmam Due to Massage
- நாக்கு வர்மம் - 1 - Varmam Due to Lick / Speech
- நோக்கு வர்மம் - 1 - Varmam Due to Sight
- படு வர்மம் - 12 - Varmam Due to Violent Injury
இவற்றில் தற்போது நடைமுறையில் 108 மட்டுமே முக்கிய வர்ம புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.
வர்மங்கொண்டால் ஏற்படும் குறி குணங்கள்
இவ்வுலகில் வாழும் மாந்தர்களுக்கு அடிபடுவதால் உண்டாகக் கூடிய வர்மங்களுக்கும், கீழே விழுவதால் ஏற்படும் வர்மங்களுக்கும், பிறர் அடிப்பதாலும், அடிபட்டு எலும்புகள் முறிவதாலும், எதிர்பாராத விபத்துகளினாலும், உயரமான இடங்களிலிருந்து கீழே விழுவதாலும், அடிபட்டு அங்கங்கள் சிதறுவதாலும், மனம் பேதலிப்பதால், விபத்துகளாலும் இன்னும் பல காரணங்களால் ஏற்படும் வர்மங்களுக்கு மருத்துவங்கள் உண்டு.
வர்மத்தின் சாத்திய அசாத்திய குறிகள்
மிகவும் நுணுக்கத்தோடு அடிபட்ட இடத்தைப் பார்க்கும் போது அந்த இடத்தில் வியர்வை குளிர்ச்சி காணப்படும். சுவாசிக்கும்போது அந்த இடத்தில் சரியாக மூச்சுவிட, வாங்க முடியாது. இக்குறிகுணங்களைக் கொண்டு சாத்தியமா அல்லது அசாத்தியமா என்பதை அறிந்து கொள்ளலாம். அசாத்தியக் குறி தெரிந்தால் வர்மம் செயல்படாது.
நரம்பு மருத்துவத்திற்கும் வர்மத்திற்கும் உள்ள தொடர்பு
எல்லா நோய்களும் ஏதேனும் ஒருவகையில் நரம்பு மண்டல தொடர்புடையனவாகவே உள்ளன. நரம்பு மண்டலம் மிக நுட்பமானது. அதற்கு வரும் நோய்களைப் போக்கி சீர்படுத்துவது மிகமிகக் கடினம்.
பிறவற்றில் ஏற்படும் கோணல்களைச் சரிப்படுத்தலாம். நரம்பு கோணிடில் வர்மத்தில் ஏதும் செய்தற்கியலாது.
மூளையிலிருந்தும், தண்டுவடத்திலிருந்தும் நரம்புகள் வெளிச் செல்கின்றன. தலைப்பகுதியில் பன்னிரு இணை நரம்புகள் உள்ளன. அவை,
- மோப்ப நரம்பு - Olfactory
- பார்வை நரம்பு - Optic
- கண் அசைவு பெருநரம்பு - Occlomotor
- கண் அசைவு சிறுநரம்பு - Trochlear
- மூக்களை நரம்பு - Trigeminal
- கண் அசைவு துடிணநரம்பு - Abducent
- மூக நரம்பு - Facial
- கேள்வி நரம்பு - Auditory
- நாத் தொண்டை நரம்பு - Glosso pharyneal
- உதர நரம்பு - Vagus
- தோளசைவு நரம்பு - Accessory
- நாவசைவு நரம்பு - Hypoglossel
நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற மகத்தான இந்த கலையானது வர்ம வைத்தியம் / மருத்துவம் பயன்பாட்டில் மிகக் குறைவாகவே கிடைக்கிறது. அதன் பெருமையைத் தமிழர்களே உணர தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும் என்றும் தமிழ் வைத்தியம் தன்னிடத்தை அடையும் என்றும் நம்புவோமாக.
கலை அழியாது! கலையின் அவசியத்தை தெரிந்து பின்பற்ற ஒரு தலைமுறை அவதிப்பட்டுதான் ஆக வேண்டும், பின்னரே வரலாறு தேடப்பட்டு கலையானது நிலைபெறும். அப்போதுதான் எக்கலையின் மதிப்பும் புரியும்.
பூனைக்கொரு காலம் வந்தால் யானைக்கும் ஒரு காலம் வரும்..!